/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் பருத்தி விளைச்சல் அதிகரிப்பு
/
திருப்புவனத்தில் பருத்தி விளைச்சல் அதிகரிப்பு
ADDED : செப் 16, 2024 05:01 AM

திருப்புவனம், : திருப்புவனத்தில் பருத்தி விலை 50 சதவீதமாக குறைந்துவிட்டதால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்டவைகள் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
இதுதவிர மழையை நம்பி பயிரிடும் பழையனூர், அச்சங்குளம், ஓடாத்தூர், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிரிடப்படுகிறது. பருத்திக்கு குறைந்த அளவு தண்ணீர் தேவை, நோய் தாக்குதலும் குறைவு, ஓரளவிற்கு வருவாய் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் பருத்தியை சாகுபடி செய்கின்றனர். ஏக்கருக்கு ரூ.20 முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து பருத்தி பயிரிட்டு 3 மாதங்களுக்கு பின் அறுவடை தொடங்குகிறது.
சுழற்சி முறையில் நடக்கும் அறுவடையில் ஏக்கருக்கு 60 கிலோ கிடைக்கும். மழை இல்லாவிட்டாலும் விளைச்சல் அதிகரிக்கும் என்பதால் கீழடி உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி பயிரிட்டனர்.
ஆனால் கடந்தாண்டு கிலோ ரூ.120க்கு விற்ற பருத்தி, இந்த ஆண்டு ரூ.50 க்கு தான் விற்பதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இது குறித்த கீழடி விவசாயி முத்து கூறியதாவது: பருத்திக்கு தண்ணீர் மிகவும் குறைவாகவே தேவைப்படும், மாதம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினாலே போதும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டு விலை குறைந்துவிட்டது.
இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் அதிகரித்ததால், விலை சரிந்துவிட்டது. திருமங்கலம் சந்தையில் கிலோ ரூ.50 க்கு தான் வாங்குகின்றனர். விலை சரிவால் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.