/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவு நீர் வடிகாலாக மாறிய பாசனக் கால்வாய்
/
கழிவு நீர் வடிகாலாக மாறிய பாசனக் கால்வாய்
ADDED : ஜூலை 05, 2024 04:46 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் பாசனக் கால்வாயை புனரமைத்து சுகாதாரப்படுத்த பொதுமக்கள் கோரியுள்ளனர்.
திருப்புத்துார் பெரியகண்மாயிலிருந்து தென்மாப்பட்டிற்கு செல்லும் 'தாம் போகி' எனப்படும் பாண்டியன் கால்வாய் திருப்புத்துார் நகருக்குள் செல்கிறது. புதுத்தெரு வழியாக மதுரை ரோடு, சிவகங்கை ரோட்டை கடக்கிறது. மதுரை ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும், அறிவு சார் மையத்திற்கும் இடையே செல்கிறது. மேலும் இந்த பிரதான கால்வாயிலிருந்து பள்ளி,மருத்துவமனை வழியாக பாசனக்கால்வாய் பிரிந்து செல்கிறது. முன்பு ஆலமரத்து ஊரணிக்கு நீர்வரத்திற்கு பயன்பட்டது.
பள்ளி பகுதியில் மாணவர்களின் பாதுகாப்பிற்காகவும், சுகாதாரத்திற்காகவும் மண் கால்வாயாக உள்ளதை கான்கிரீட் கால்வாயாக மாற்றவும், கழிவுநீர் கலக்காமல் நடைமுறைப்படுத்தவும் பொதுமக்கள் கோரி வருகின்றனர். கழிவுநீர் நிறைந்து அப்பகுதி சுகாதாரக் கேடாக உள்ளது. அப்பகுதி ரோடும் மண் சரிந்து சேதமடைந்துள்ளது.இதனைத் தவிர்க்க கால்வாயை மேம்படுத்த கோரப்பட்டுள்ளது.
பொ.ப.து. பொறியாளர் கூறுகையில்,' பெரியகண்மாய் துவங்கி சிவகங்கை ரோடு வரை உள்ள கால்வாய் கான்கிரீட் கால்வாய் மாற்ற ரூ 4.9 கோடியில் திட்டமிடப்பட்டு நிதி அனுமதிக்காக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பள்ளியருகில் பாதுகாப்பான கால்வாய் அமைக்கப்படும். குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் செல்ல தனி குழாய் அமைக்கப்பட்டு நகருக்கு வெளியே கடத்தப்படும்' என்றார்.