ADDED : மே 09, 2026 07:12 PM
சிங்கம்புணரி, மே 10-
சிங்கம்புணரியில் வீடுகளுக்கு காவிரி நீரை கொண்டு செல்லும் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இப்பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் அம்ருத் 2.0 மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் காவிரி குடிநீர் கொண்டு செல்ல குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. நகருக்கு ஏற்கனவே 10 லட்சத்து 60 ஆயிரம் லிட்டர் காவிரி குடிநீர் ஒதுக்கீடு இருந்தும் முறையான தொட்டிகள், குழாய் கட்டமைப்பு பற்றாக்குறை இருந்தது. இதனால் 8 லட்சத்து 60 ஆயிரம் விட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. இது தவிர போர்வெல் மூலம் 6,30,000 லிட்டர் தண்ணீர் கூடுதலாக விநியோகிக்கப்பட்டது.
இந்நிலையில் அனைத்து வீடுகளுக்கும் முழுமையாக காவிரி குடிநீரை கொண்டு செல்ல அம்ருத் 2.0 மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தில் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. நகரில் 50 கி.மீ., சுற்றளவில் குழாய் கட்டமைப்பை ஏற்படுத்தி தேவையான இடங்களில் தொட்டிகள் கட்டி அனைத்து வீடுகளுக்கும் காவிரி நீரை கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. பணிகள் துவங்கி நீண்ட நாள் ஆகியும் இன்னும் முழுமை பெறவில்லை. 90 சதவீதம் முடிவுற்ற நிலையில் பணிகளை விரைந்து முடித்து வீடுகளுக்கு குடிநீர் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
