/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் பரவும் மஞ்சள் காமாலை
/
சிவகங்கையில் பரவும் மஞ்சள் காமாலை
ADDED : ஜூலை 23, 2024 05:12 AM
சிவகங்கை: சிவகங்கையில் சுகாதாரமற்ற குடிநீர் மூலம் பரவி வரும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியத்தை இன்னும் மக்கள் கடைபிடிக்கின்றனர். இதனால் இந்நோய் தீவிரமடைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
மாவட்ட அளவில் குளங்களில் தரமற்ற குடிநீரால் தொண்டை வலி, தொண்டைப்புண் மற்றும் மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒரே கிராமத்தில் 3 முதல் 4 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே மாங்குடியில் பள்ளி மாணவருக்கு இந்நோய் தாக்கியதை சுகாதாரத்துறையினர் கண்டறிந்தனர். சில கிராமங்களில் மஞ்சள் காமாலை அறிகுறி தென்பட்டவர்களை மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்து வராமல், நாட்டு வைத்தியரிடம் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் தீவிரமடைந்து, பாதிப்பு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் கூறியதாவது: அனைத்து மக்களும் குடிப்பதற்கு சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்தவும். நன்கு காய்ச்சி வடிகட்டிய குடிநீரை தான் பருகவேண்டும். கிராமப்புறங்களில் குடிநீர் ஊரணிகளில் மனித, விலங்குகளின் கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பருகவேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள குடிநீர் மேல்நிலை, தரைமட்ட தொட்டிகளை 'குளோரினேஷன்' செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம், என்றார்.