ADDED : ஆக 21, 2026 04:42 PM
சிவகங்கை, ஆக.22-ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பி.ஓ.எஸ்., இயந்திரத்திற்கு இணைய தள வசதி சரியாக கிடைக்காததால், அந்த இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்களுக்கு இணைய தள வசதி தடையின்றி கிடைத்தால் மட்டுமே, கார்டுதாரர்களுக்கு தடையின்றி பொருட்களை வினியோகம் செய்ய முடியும். ஆனால், பெரும்பாலான ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., இயந்திரங்களுக்கு இணையதள வசதி கிடைப்பதே இல்லை.
இதை கண்டித்து நேற்று வட்ட வழங்கல் அலுவலரிடம் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் சிவகங்கையில் நடந்த போராட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் கவுரி தலைமை வகித்தார். வட்டார நிர்வாகி ராஜேஸ்வரன், ராமகிருஷ்ணன், தேவகோட்டையில் மாநில பொது செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் சரவணன், ராஜேந்திரன், மகளிரணி ஜீவிதா, திருப்புவனத்தில் மாவட்ட தலைவர் மாயாண்டி, சேதுராமன், மானாமதுரையில் மாவட்ட செயலாளர் திருஞானம் தலைமையில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ///
