/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம்
/
மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம்
ADDED : ஜூலை 16, 2024 11:59 PM
மானாமதுரை : மானாமதுரை ஊராட்சி ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ்,மாலதி முன்னிலை வகித்தனர்.மேலாளர் விஜயகுமார் வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
துணைத் தலைவர் முத்துசாமி, தி.மு.க.,: பெரியகோட்டை, தெக்கூர் கிராமங்களில் சேதமடைந்த குடிநீர் தொட்டிகளை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், முன்னாள் முதல்வர் கருணாநிதி கனவு இல்ல திட்ட பயனாளிகளை தேர்ந்தெடுக்கும் போது ஒன்றிய கவுன்சிலர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
பி.டி.ஓ., லூயிஸ் ஜோசப் பிரகாஷ்: துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் இ.கம்யூ.,: கீழப்பசலை கிராமத்தில் டிரான்ஸ்பார்மரில் உள்ள மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது.
அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது கோடை சாகுபடி நடைபெற்று வருவதால் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் பணியாளர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்வது கிடையாது.
பி.டி.ஓ.,: மின் கம்பங்கள் சேதமடைந்தது குறித்து மின் வாரியத்தினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக மாற்றவும், சுற்று சுவர் கட்டுவதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் அ.தி.மு.க.,: 2016ம் ஆண்டு கட்டப்பட்ட இ-சேவை மையம் இன்னும் செயல்படாமல் உள்ளது. நுாலகம் அமைக்க வேண்டும், சிறிய ஆவரங்காட்டிலிருந்து பெரிய ஆவரங்காட்டிற்கு ரோடு அமைக்க வேண்டும்.
வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தில் துணை சுகாதார செவிலியர் பணியிடம் காலியாக இருப்பதால் கர்ப்பிணிகள், குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர்.
முத்தனேந்தல் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் கண்ணன்: துணை சுகாதார செவிலியர்கள் பணியிடம் காலியாக இருப்பது குறித்து மேலதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.விரைவில் பணியிடங்கள் நிரப்பப்படும்.
கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் அண்ணாதுரை, மலைச்சாமி, ருக்மணி, ராதா, ஒன்றிய பணியாளர்கள், அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.