/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் தி.மு.க., கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல் சமரசம் செய்து வைத்த அமைச்சர்
/
சிவகங்கையில் தி.மு.க., கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல் சமரசம் செய்து வைத்த அமைச்சர்
சிவகங்கையில் தி.மு.க., கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல் சமரசம் செய்து வைத்த அமைச்சர்
சிவகங்கையில் தி.மு.க., கவுன்சிலர்கள் கோஷ்டி மோதல் சமரசம் செய்து வைத்த அமைச்சர்
ADDED : ஜூலை 16, 2024 11:28 PM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சியில் தி.மு.க.,வைச் சேர்ந்த தி.மு.க., நகராட்சி தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர் கார் கண்ணன் கோஷ்டியாக பிரிந்து மோதி கொண்டுள்ளனர். நேற்று நகராட்சிக்கு வந்த அமைச்சர் பெரியகருப்பன் அவர்களை அழைத்து சமரசம் செய்து வைத்தார்.
தலைவரும், துணை தலைவரும் சில நாட்களாக இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஜூன் 14 ல் துணைத்தலைவர் கார்கண்ணன் நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அளித்த புகாரில் கூறியதாவது: நகராட்சி கமிஷனர் ஒரு தலை பட்சமாக செயல்படுகிறார். வார்டுகளில் பணிகள் செய்து கொடுப்பதில்லை. நகராட்சியில் முறைகேடுகள் தலைவிரித்தாடுகிறது.
கலெக்டர் அலுவலகம் அருகேவுள்ள நகராட்சி பூங்காவில் சில நாட்களுக்கு முன் கோடை திருவிழா என்ற பெயரில் விதிகளை மீறியுள்ளனர். முன் தேதியிட்டு கோப்பும் தயாரிக்கப்பட்டுள்ளது.
நகராட்சி ஊழல் புகார் தொடர்பாக கமிஷனர், மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குற்றம்சாட்டியிருந்தார்.
சிவகங்கை அரண்மனை வாசலில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சி.எல்.சரவணன் அமைச்சரிடம் வார்டு பிரச்னை குறித்து புகார் அளித்தார். அப்போது அருகில் இருந்த தலைவர் துரைஆனந்துக்கும் கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் அவர்களை சமரசப்படுத்தினார். ஆனால் அமைச்சர் சென்ற சிறிது நேரத்தில் இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் ஜூலை 11 ல் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் 11 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காதில் பூ சுற்றி நகராட்சி நுழைவு வாயிலில் தன் ஆதரவு கவுன்சிலர்களுடன் துணை தலைவர் கார்கண்ணன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த புகார் தி.மு.க., தலைமைக்கு சென்றது. இரண்டு தரப்பினரையும் சமரசம் செய்து வைக்க அமைச்சர் பெரியகருப்பனுக்கு தலைமை உத்தரவிட்டது. நேற்று நகராட்சி அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் தலைவர், துணை தலைவர் தரப்பினரை அழைத்து சமரசம் செய்தார்.
துணை தலைவர் கார் கண்ணன் கூறுகையில், ''அமைச்சர் அனைவரையும் இணக்கமாக செல்லும்படி கூறினார்,'' என்றார்.
தலைவர் துரை ஆனந்த் கூறுகையில், ''அமைச்சர் மானாமதுரைக்கு செல்லும் வழியில் நகராட்சிக்கு வந்தார். கவுன்சிலர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். வளர்ச்சி பணிகளை கேட்டார். நகராட்சி வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கவுன்சிலர்களுக்கு அறிவுரை வழங்கினார்,'' என்றார்.