/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழந்தையை கொலை செய்து தாய் தலைமறைவு; போலீசார் விசாரணை
/
குழந்தையை கொலை செய்து தாய் தலைமறைவு; போலீசார் விசாரணை
குழந்தையை கொலை செய்து தாய் தலைமறைவு; போலீசார் விசாரணை
குழந்தையை கொலை செய்து தாய் தலைமறைவு; போலீசார் விசாரணை
ADDED : மே 23, 2024 11:53 PM

திருப்பாச்சேத்தி : சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே நாட்டார்குடி கிராமத்தில் நான்கு மாத குழந்தையை கொலை செய்து கட்டைப் பையில் வைத்து தலைமறைவான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
நாட்டார்குடி கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் 35, மனைவி முருகேஸ்வரி. திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். சந்திரசேகர் கோயம்புத்துாரில் பேக்கரியில் வேலை பார்க்கும் போது தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய மஞ்சுவை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்தார்.
மஞ்சு கர்ப்பமாக இருந்ததால் நாட்டார்குடிக்கு வந்தனர். போக்குவரத்து வசதி இல்லாததால் சிறிது காலம் சிவகங்கை அண்ணாமலை நகரில் குடியிருந்தனர். வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய கூறியதால் மறுபடியும் நாட்டார்குடியில் உள்ள வீட்டிற்கு வந்தனர். நான்கு மாதத்திற்கு முன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
மே 21ல் மஞ்சு சிவகங்கை வீட்டிற்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி வாங்கி வருவதாக கூறி குழந்தையுடன் சிவகங்கை வந்தார். அதன் பின்னர் மஞ்சு வீட்டிற்கு திரும்ப வில்லை. கணவர் சந்திரசேகர், மாமியார் காளிமுத்து இருவரும் பல முறை தொடர்பு கொண்ட போதும் அலைபேசி சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.
அன்று இரவு அவரது தாயார் அலைபேசியில் பேசிய மஞ்சு எனது தாயார் வீட்டிற்கு வந்து விட்டேன். என்னை தேடாதீர்கள் என தெரிவித்தார். குழந்தை எங்கே என்று மாமியார் காளிமுத்து கேட்கவே, அய்யனார் கோயில் அருகே குழந்தையை கட்டைப் பையில் வைத்துள்ளதாக தெரிவித்தார்.
சந்திரசேகர், காளிமுத்து, அய்யனார் கோயில் சென்று பார்த்த போது கட்டை பையில் அந்த நான்கு மாத குழந்தை இறந்து கிடந்தது. அந்த குழந்தையை புதைத்தனர்.
இதுகுறித்து ஊரை சேர்ந்த ஒருவர் திருப்பாச்சேத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
மேலும் குழந்தையை புதைத்த இடத்தில் குழந்தை உடலை தாசில்தார் சிவராம், இன்ஸ்பெக்டர் சிவகுமார் முன்னிலையில் எடுத்து பிரேத பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. குழந்தையை கொலை செய்து புதைத்ததாக வி.ஏ.ஓ.,புகழேந்தி புகார் கொடுத்தார். திருப்பாச்சேத்தி போலீசர் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மஞ்சுவின் சொந்த ஊர் பற்றிய எந்த விபரமும் கணவர் சந்திரசேகருக்கு தெரியவில்லை. மஞ்சுவின் அலைபேசி துண்டிக்கப்பட்டதால் அவரின் தாயார் எண்ணை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மஞ்சுவை பிடித்தால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரிய வரும்.