ADDED : ஆக 15, 2024 04:50 AM

சிவகங்கை, : சாத்தனி கிராமத்தில் விவசாயம் செழிக்க முளைப்பாரி திருவிழா நடந்தது. ஆக.5 முத்துமாரியம்மனுக்கு காப்புக்கட்டுதலுடன் விழா துவங்கியது.தினமும் இரவு அம்மனை சுற்றி பாட்டு பாடி பாரம்பரிய முறைப்படி கும்மி அடித்து அம்மனை வழிபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு வீடுகளில் வளர்த்த முளைப்பாரியை முத்துமாரியம்மன் கோயிலில் வைத்து வழிபட்டனர். நேற்று காலை முளைப்பாரியை கிராம ஊரணியில் கரைத்து மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டினர்.
கீழவாணியங்குடி மேல தெரு வீரமாகாளி அம்மன் கோயிலில் முளைப்பாரி விழா நேற்று நடந்தது.கடந்த 7ஆம் தேதி காப்புகட்டுதலுடன் விழா துவங்கியது. விழா நாட்களில் அம்மனுக்கு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் கோயில் மந்தையில் வீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன.
காப்பு கட்டிய பெண்கள் நவதானியங்கள் கொண்டு வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை தலையில் சுமந்து மந்தையை சுற்றி வலம் வந்தனர். வீரமாகாளியம்மனுக்கு முளைப்பாரியை சமர்ப்பித்து வழிபட்டனர். நேற்று காலை முளைப்பாரியை கிராம ஊரணியில் கரைத்தனர்.