/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடை விவசாயத்திற்கு மானியம் இல்லை விவசாயிகள் வேதனை
/
கோடை விவசாயத்திற்கு மானியம் இல்லை விவசாயிகள் வேதனை
கோடை விவசாயத்திற்கு மானியம் இல்லை விவசாயிகள் வேதனை
கோடை விவசாயத்திற்கு மானியம் இல்லை விவசாயிகள் வேதனை
ADDED : ஜூலை 04, 2024 01:30 AM

திருப்புவனம்: கோடை விவசாயத்திற்கு மானிய விலையில் விதை நெல் வழங்கப்படாததால் சாகுபடி வெகுவாக குறைந்து வருகிறது.
திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் கிணற்று பாசனம் மூலமாகவும் விவசாயம் நடைபெறுகிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி ஆகஸ்ட் , செப்டம்பரில் நெல் சாகுபடி இரண்டாயிரம் எக்டேரில் நடைபெறுகிறது. ஜனவரி அறுவடைக்கு பின் ஒரு சில விவசாயிகள் கோடை விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். இந்தாண்டு கோடை மழை சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு பெய்யவில்லை. மேலும் வெயிலின் தாக்கம் ஜனவரி முதலே நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்ததால் விவசாயத்தில் செலவீனம் அதிகரித்துள்ளது.
நெல் சாகுபடிக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வரும் நிலையில் தற்போது 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. வேளாண் துறை மூலம் காலம் பருவத்திற்கு மட்டுமே மானிய விலையில் விதை நெல் வழங்கப்படுகிறது. கோடை விவசாயத்திற்கு வழங்கப்படுவது இல்லை. இதனால் செலவு அதிகரித்துள்ளது.
ஆனால் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் தொடர்ந்து நெல் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருப்புவனம் அருகே பாப்பாகுடி உள்ளிட்ட பகுதிகளில் மகேந்திரா என்ற 120 நாள் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு 25 மூடை வரை கிடைக்கிறது. மதுரையில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கிச்செல்வதால் பம்ப்செட் விவசாயிகள் மகேந்திரா வகை நெல் பயிரிட்டுள்ளனர்.
பெண் விவசாயி பிரதீபா கூறுகையில்: கடந்தாண்டு மகேந்திரா வகை நெல் பயிரிட்டோம், ஏக்கருக்கு 35 மூடை வரை கிடைத்தது. மதுரையில் இருந்து வந்த வியாபாரிகள் 67 கிலோ எடை கொண்ட ஒரு மூடை நெல் ஆயிரம் ரூபாய் என வாங்கிச்சென்றனர். இந்தாண்டு கோடை வெயில் காரணமாக செலவு அதிகரித்ததுடன் விளைச்சலும் பாதித்துள்ளது. 35 மூடை கிடைத்த இடத்தில் வெறும் 20 முதல் 25 மூடைகளே கிடைத்துள்ளன என்றார்.