ADDED : ஆக 22, 2024 02:47 AM

சிவகங்கை: தமிழ்நாடு அரசின் பென்ஷன் திட்டத்தில் ஊராட்சி செயலர்களையும் சேர்க்க வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ், 445 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு செயலர் வீதம் 445 பேர் பணிபுரிய வேண்டும். ஆனால், இங்கு 405 ஊராட்சி செயலர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் பென்ஷன் திட்டத்தில், ஊராட்சி செயலர்களையும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், பொருளாளர் மாரிமுத்து, மாநில மகளிர் இணை செயலாளர் மீனாட்சி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் அஞ்சுகம் உட்பட மாவட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட அளவில் உள்ள 405 ஊராட்சி செயலர்களில் 270 பேர் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனால், மாவட்ட அளவில் கிராம ஊராட்சிகளில் நிர்வாக பணிகள் பாதிக்கப்பட்டன.