ADDED : மார் 26, 2024 05:52 AM

தேவகோட்டை : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேவகோட்டை பாலமுருகன் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தி.ராம.சாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வேலிற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. மகேஸ்வரபூஜை பொது விருந்து நடந்தது. தண்டாயுதபாணி மலைக்கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
மானாமதுரை
கால்பிரவு செல்வமுருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு காலை 6:20 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சுப்ரமணியர் மூல மந்திரம் காயத்ரி ஜெப ஹோமம் நடைபெற்றது.பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து பால்குடம் எடுத்து வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். மாலை உற்சவர் மயில் வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் கால்பிரவு, மானாமதுரை பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி வடக்கு வேளார் தெரு பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர பால்குட விழா நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு சேவுகப்பெருமாள் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டு கோயிலை வந்தடைந்தது. அங்கு முருகனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை வடக்கு வேளார் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிங்கம்புணரி கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
