/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சேதமான களத்துார் ரோடு போக்குவரத்தின்றி மக்கள் அவதி
/
சேதமான களத்துார் ரோடு போக்குவரத்தின்றி மக்கள் அவதி
சேதமான களத்துார் ரோடு போக்குவரத்தின்றி மக்கள் அவதி
சேதமான களத்துார் ரோடு போக்குவரத்தின்றி மக்கள் அவதி
ADDED : மே 05, 2024 06:38 AM

சிவகங்கை : இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சீவலாதி, சாத்தனுார் ஊராட்சிக்குட்பட்ட 4 கி.மீ., துாரம் செல்லும் களத்துார் ரோடு குண்டும் குழியுமாக இருப்பதால், பஸ் போக்குவரத்தின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில், மாவட்ட எல்லையில் சீவலாதி, சாத்தனுார் ஆகிய ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான சாத்தனுார் விலக்கு முதல் ஆர்.எஸ்., மங்கலம் விலக்கு வரையிலான 4 கி.மீ., துாரம் செல்லும் களத்துார் ரோடு பல ஆண்டுகளாககுண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சிதிலமடைந்துள்ளது.
இந்த ரோட்டில் செல்ல முடியாத அளவிற்கு சாத்தனுார், கோடானுார், களத்துார், மஞ்சள் பட்டினம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேதமடைந்துள்ள ரோட்டால், இப்பகுதி கிராமங்களுக்கு பரமக்குடி, இளையான்குடியில் இருந்து அரசு பஸ்களை இயக்குவதே இல்லை. மேலும் இந்த ரோட்டில் 11 இடங்களில் கண்மாய் மடைகள் செல்கின்றன.
அந்த மடைகளையும் செப்பனிட்டு, களத்துார் ரோட்டை புதுப்பித்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மாவட்ட எல்லையில் உள்ளதால் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துதர மாவட்ட நிர்வாகம் முன்வரவில்லை என சீவலாதி, சாத்தனுார் ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ரோட்டை புதுப்பித்து தருவதோடு, களத்துாருக்கு அரசு பஸ்கள் இயக்க வலியுறுத்தி கிராம மக்கள் நேற்று கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவனிடம் புகார் அளித்தனர்.
சீவலாதி ஊராட்சி தலைவர் பழனியம்மாள் கூறியதாவது:
தொடர்ந்து களத்துார் ரோட்டை புதுப்பித்து தருமாறு பல முறை அரசிடம் கோரிக்கை வைத்துவிட்டோம். இதற்கென நிதி ஒதுக்கியுள்ளதாக கூறுகின்றனர். இன்னும் ரோடு போடப்படவில்லை. தொடர் கோரிக்கைக்கு பின் பரமக்குடியில் இருந்து காலையில் மட்டும் களத்துாருக்கு அரசு டவுன் பஸ் இயக்குகின்றனர். தொடர்ந்து இங்கு பஸ் வசதியில்லை.