/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக்குளத்தில் அடிக்கடி சேதமாகும் குழாய்கள்
/
கட்டிக்குளத்தில் அடிக்கடி சேதமாகும் குழாய்கள்
ADDED : பிப் 24, 2025 04:21 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே கட்டிக்குளத்தில் அடிக்கடி சேதமடையும் குழாய்களால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கட்டிக்குளம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக வைகை ஆற்றிலிருந்தும், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கட்டிக்குளம் கிராமப் பகுதிகளில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக புதிய ரோடு போடும் பணிகள் மிகவும் மந்த கதியில் நடைபெற்று வருவதால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் சேதமடைந்து வருகின்றன.
இதனால் கட்டிக்குளத்தில் ஒழுங்கான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, கட்டிக்குளம் கிராம மக்களின் தேவைக்காக வைகை ஆறு, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் மற்றும் போர்வெல்கள் மூலம் புழக்கத்துக்குரிய தண்ணீரும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 மாத காலமாக இப்பகுதியில் ரோடு மராமத்து பணி நடைபெறும் போது குழாய்கள் அடிக்கடி சேதமடைந்து வருகின்றன.
அவ்வப்போது குழாய்களை சரி செய்தாலும் கட்டிக்குளம் பகுதியில் குடிநீர் மற்றும் புழக்கத்துக்குரிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறோம்.
2 நாட்கள் தண்ணீர் வந்தால் 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் வராமல் உள்ளது.
இதனால் வண்டிகளில் வரும் தண்ணீரை ஒரு குடம் ரூ.15க்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது, என்றனர்.