/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செண்பகம்பேட்டையில் புரவி எடுப்பு விழா
/
செண்பகம்பேட்டையில் புரவி எடுப்பு விழா
ADDED : மே 26, 2024 04:08 AM

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் செண்பகம்பேட்டை பணிச்சார் உடைய அய்யனார் கோயில், செகுட்டு அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது.
இக்கோயில்களில் வைகாசியில் மழை வேண்டி கிராமத்தார்கள் புரவி எடுப்புத் திருவிழா நடப்பது வழக்கம்.
மே 10ல் பிடிமண் கொடுத்து புரவிகள் தயாரிக்கும் பணி துவங்கியது. மே 17 ல் பொட்டு விடுதல் எனும் உத்தரவு கிராமத்தினருக்கு வழங்கப்பட்டது. அன்றிலிருந்து கிராமத்தினர் ஒரு வார விரதத்தை துவக்கினர். தினசரி புரவி பொட்டலில் பெண்கள் கூடி வழிபட்டனர்.
மே 24 ல் காப்பு கட்டப்பட்டு கண்மாயில் சேங்கை மண் வெட்டப்பட்டது. பருவமழை பெய்து நீர்நிலை பெருக வேண்டி சேங்கை மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் சூலக்கரையிலிருந்து சேமக்குதிரை முன்னே செல்ல, தொடர்ந்து கிராமத்தினர் நேர்த்தி கடனாக கொண்டு வந்த 200-க்கும் மேற்பட்ட மண் குதிரைகள், காளைகள் ஊர்வலமாக வந்து புரவிப் பொட்டலில் சேர்ந்தது.
நெல்மணிகளை மண் குதிரையின் காலில் கொட்டி பெண்கள் வழிபட்டனர்.
நேற்று மாலை பணிச்சார் உடைய அய்யனார், செகுட்டு அய்யனார், விநாயகர், பத்ரகாளி அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து கிராமத்தினர் புரவி பொட்டல் வந்து புரவிகளுக்கு ஆடு பலியிட்டனர்.