ADDED : ஜூன் 27, 2024 05:10 AM

காரைக்குடி : காரைக்குடி பழைய ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழி சகதிக்காடாக காட்சியளிப்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து சென்னை, ராமேஸ்வரம், செங்கோட்டை, புதுச்சேரி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தனியார், அரசு வேலை செய்வோர் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில், பல்வேறு திட்டப் பணிகள் நடந்து வருவதால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பலரும் பழைய ரயில்வே ஸ்டேஷன் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். சிறிய மழைக்கே இப்பகுதி முழுவதும், சகதிக்காடாக மாறிவிடுகிறது. இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
மேலும், அருகிலேயே பல்வேறு ரயில்வே அலுவலகங்கள் இருப்பதால் அலுவலகத்திற்கு வருபவர்களும் சிரமம் அடைகின்றனர். எனவே சகதிக்காடாக காட்சியளிக்கும் பகுதியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.