ADDED : ஜூலை 25, 2024 04:32 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பதை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இத்தாலுகாவில் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக பாலாறு உள்ளது. ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஓடிய இந்த ஆற்றில் தற்போது பெருவெள்ளம் வந்தால் மட்டுமே தண்ணீரை பார்க்க முடிகிறது. ஆற்றின் பல இடங்களில் மணல் அள்ளப்பட்டதும், மேற்பகுதியில் அதிக எண்ணிக்கையில் தடுப்பணை கட்டப்பட்டதுமே இதற்கு காரணம்.
இந்நிலையில் தற்போது அணைக்கரைப்பட்டி பகுதியில் மீண்டும் மணல் கொள்ளை அமோகமாக நடக்கிறது. ஆற்றின் மையப்பகுதியிலும், அருகேயுள்ள தோட்டங்களிலும் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளி வருகின்றனர். சிலர் சாக்குப்பைகளில் மணலை அள்ளி வேறு இடத்தில் சேகரித்து பிறகு லாரிகள் மூலம் கொண்டு சென்று விற்கின்றனர்.
இதனால் ஆற்றின் எஞ்சிய பகுதியும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நகரை ஒட்டிய பகுதியில் நடக்கும் மணல் கொள்ளையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.