ADDED : மே 01, 2024 07:57 AM

காரைக்குடி : கல்லல் அருகே உள்ள கல்லுப்பட்டு, செவரக்கோட்டை, தேவப்பட்டு, குருந்தம்பட்டு,கல்லல் வழியாக மணிமுத்தாறு செல்கிறது.
விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மணிமுத்தாற்றில் கடந்த சில நாட்களாக மணல் கொள்ளை நடந்து வருகிறது.
டிராக்டர், லாரிகளில் நடந்து வரும் மணல் கொள்ளை குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மணல் கொள்ளையால் ஆறு அழிந்து வருவதோடு, நீராதாரம் பாதிப்படைவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஊராட்சி தலைவர் செந்தில்குமார் கூறுகையில்: இப்பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளை நடந்து வருவது அதிகாரிகளுக்கு தெரிந்தும் அவர்கள் யாரும் தடுப்பதில்லை. இதேநிலைத் தொடர்ந்தால், விவசாயம் மற்றும் நீர் ஆதாரம் அழிந்து இப்பகுதியே பாலைவனமாக மாறிவிடும். மணல் கொள்ளையர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாசில்தார் தங்கமணி கூறுகையில்; இது தொடர்பான புகார் வந்துள்ளது. கோட்டாட்சியரிடமும் புகார் குறித்து தெரிவித்துள்ளோம். சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.