/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை-சென்னைக்கு போதிய பஸ்கள் இல்லாமல் அவதி
/
சிவகங்கை-சென்னைக்கு போதிய பஸ்கள் இல்லாமல் அவதி
ADDED : ஜூலை 21, 2024 04:48 AM
சிவகங்கை: சிவகங்கையிலிருந்து சென்னைக்கு நேரடியாக ஒரே ஒரு அரசுப்பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் நடுத்தர மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மண்டலத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசுபோக்குவரத்துக்கழகத்தில் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் 11 பணிமனைகள் இயங்குகிறது. இங்கிருந்து புறநகர் மற்றும் நகர் பஸ்கள் என மொத்தம் 650 பஸ்கள் இயங்கி வருகிறது.
சென்னையிலிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
குறைந்த கட்டணத்தில் ஏராளமான பயணிகள் நெடுந்தொலைவில் உள்ள இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு விரைவு போக்குவரத்துக்கழகம் தவிர்த்து தமிழகத்திலுள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்களின் 21 மண்டலங்களின் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் இருந்து தினமும் சென்னைக்கு 2 பஸ்களும் சென்னையிலிருந்து மாவட்ட தலைநகரங்களுக்கு 2 பஸ்களும் என மொத்தம் 4 பஸ்கள் இயக்கப்பட்டது. சிவகங்கை பணிமனையிலிருந்தும் கடந்த காலங்களில் 4 பஸ்கள் இயக்கப்பட்டது.
இதன் மூலம் தினமும் 180 பேர் சென்னைக்கு குறைந்த கட்டணத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் இயக்கப்பட்டு வந்த பேருந்து வழித்தடங்கள் அனைத்தும் விரைவுப் போக்குவரத்துக்கழகம் வசம் சென்று விட்டன.
சிவகங்கை நகரில் இருந்து தினமும் 200 முதல் 500 பேர் சென்னைக்கு பயணிக்கும் சூழ் நிலையில், 45 பேர் மட்டுமே செல்லக்கூடிய வகையில், விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் தற்போது ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இருக்கைகள் முன்பதிவு செய்யும் இந்தப் பஸ்சில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் ஆம்னி பஸ்களில் ரூ.1000 முதல் 1200 வரை செலவழித்து சென்னை செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிகை காலம், விடுமுறை காலங்களில் மட்டுமே சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மற்ற நாட்களில் சிவகங்கை மக்கள் பாடு திண்டாட்டம் தான்.
எனவே அரசு சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். இல்லையெனில் காரைக்குடி மண்டலம் சார்பில் வழக்கம் போல பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும்.