/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் மழை கழிவுநீரோடு தேங்கிய நீர்
/
இளையான்குடியில் மழை கழிவுநீரோடு தேங்கிய நீர்
ADDED : ஜூன் 02, 2024 03:52 AM

இளையான்குடி: இளையான்குடியில் பெய்த மழை காரணமாக ரோடுகளில் கழிவு நீரோடு மழை நீரும் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இளையான்குடி சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கடுமையாக அடித்து வருகிறது.இந் நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு துவங்கிய மழை அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
காமராஜர் ரோட்டில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மாவடி வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியது.
மழை நீரும் சேர்ந்து ரோட்டில் வெளியேறியதால் பொதுமக்கள் தேங்கிய நீரில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் கழிவு அடைபட்டுள்ளதால் வாய்க்காலை உடைத்து விட்டு புதிய வாய்க்கால் கட்ட வேண்டுமென்று நெடுஞ்சாலை துறையிடம் மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே சிறிய மழை பெய்தாலே இப்பகுதியில் கழிவுநீரோடு மழை நீரும் சேர்ந்து கொள்வதால் பொதுமக்கள் இப்பகுதியை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.
*சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
காளையார்கோவில் அருகே விட்டனேரி ஊராட்சி உடவயல் கிராமத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததில் மின்கம்பம் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது.
அக்னி நட்சத்திரத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மாலை 4:45 மணிக்கு சிவகங்கையில் பலத்த மழை பெய்ய துவங்கியது.
தொண்டி ரோட்டில் ரயில்வே பாலம் பகுதியில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
பஸ் ஸ்டாண்ட், அரண்மனைவாசல், காந்தி வீதி, மஜீத் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவும் கலந்து ரோட்டில் ஓடியது.