/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நடுரோட்டில் மோதிய மாணவர்கள் சஸ்பெண்ட்
/
நடுரோட்டில் மோதிய மாணவர்கள் சஸ்பெண்ட்
ADDED : ஆக 09, 2024 02:25 AM
திருப்புவனம்,:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடுரோட்டில் மோதிக்கொண்ட வடகரை அரசு ஆண்கள் பள்ளி பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 2 மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கை குழு பத்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
வடகரையில் அரசு ஆண்கள் பள்ளியில் 800 மாணவர்கள் படிக்கின்றனர். பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் திருப்புவனம் வந்து செல்கின்றனர். பஸ்களில் மாணவர்கள் சிலர் கோஷ்டியாக பிரிந்து மாணவிகளை கேலி செய்வது, ஜாதி ரீதியிலான பாடல்களை அலைபேசியில் சப்தமாக வைப்பது, படிகளில் பயணிப்பது, தட்டி கேட்கும் டிரைவர், கண்டக்டர்களை தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வெளியில் தகராறில் ஈடுபடும் சில மாணவர்கள் பள்ளிக்குள் சென்றும் ஒருவருக்கு ஒருவர் மோதி கொள்கின்றனர். சில நாட்களுக்கு முன் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் இரு மாணவர்கள் பள்ளி நேரம் துவங்குவதற்கு முன் மோதிக்கொண்டனர். மாலை பள்ளி முடிந்தும் சீருடையுடன் பஸ் ஸ்டாப்பில் மோதிக்கொண்டனர்.
மேலும் இருவரும் ஆட்களை அழைத்து வந்து தினமும் தகராறில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஒரு மாணவரின் தாயார் மகனை கண்டிக்காமல் பள்ளியினுள் நுழைந்து தலைமையாசிரியை உள்ளிட்ட ஆசிரியர்களை அவதூறாக பேசினார். போலீசார் அவரை வெளியேற்றினர்.
தொடர்ந்து பள்ளியின் அமைதிக்கு இடையூறான செயல்களில் இரு மாணவர்களும் ஈடுபட்டு வருவதால் ஒழுங்கு நடவடிக்கை குழு அவர்களை பத்து நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று காலை முதுவன்திடல் மற்றும் மேலசொரிக்குளம் கிராம பள்ளி மாணவர்கள் பஸ்சினுள் தவறுதலாக கால் பட்டதற்காக பஸ்சிலிருந்து இறங்கிய பின் மணிமந்திரவிநாயகர் கோயில் அருகே மோதிக்கொண்டனர்.
இதுதொடர்பாக திருப்புவனம் போலீசார் இரு மாணவர்களை பிடித்து விசாரிக்கின்றனர்.