
சிவகங்கை காந்தி வீதியில் கழிவுநீர் கால்வாய் துார் வாரும் பணியை நகராட்சி நிர்வாகம் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்டு வருகிறது. கால்வாயில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுவதாக கூறி கால்வாயின் மேலே உள்ள கற்களை பெயர்த்து ரோட்டின் மையப்பகுதியில் போட்டு விடுகின்றனர். கழிவுகளை அள்ளி அதன் அருகிலேயே குவித்து வைக்கின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் இந்த பணி நடப்பதால் மக்கள் அந்த ரோட்டில் வாகனங்களில் கடந்து செல்ல முடியவில்லை. வியாபாரிகளும் வியாபாரம் செய்ய முடியாமல் கடைகளை மூடி சென்று விடுவதால் அவர்களுக்கு வியாபாரம் பாதிக்கிறது. இந்த பணியை இரவில் மேற்கொள்ளாமல் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பகலில் மேற்கொள்வதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
சாக்கடையின் மீது தற்போது புதிய கால்வாய் எதுவும் கட்டாத நிலையில் பெரிய அளவில் சாக்கடையை தோண்டுவதால் வியாபாரிகளும் தங்களது சொந்த செலவிலேயே சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பிட்ட சில இடங்களில் இந்த பணி பாரபட்சமாக மேற்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், கடந்த இரண்டு தினங்களாக நகராட்சி சார்பில் கடைகளின் முன்பாக செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாயில் துார்வாரும் பணியை செய்து வருகின்றனர். இரண்டு நாட்களாக வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது. அதேபோல் கால்வாயில் அள்ளப்படும் கழிவும் அப்படியே ரோட்டில் கிடக்கிறது. கால்வாய் மூன்று அடிக்கு மேல் அகலமாக இருப்பதால் கடையை திறக்க சிரமமாக உள்ளது.
ஏற்கனவே தெற்கு ராஜவீதியில் கால்வாய் துார்வாரப்பட்டு கழிவுகளை அள்ளிய பிறகு கால்வாய்களை மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். கால்வாயை தாண்டி மக்கள் பொருட்கள் வாங்க முடியாததால் அந்தந்த கடைக்காரர்களே சீரமைத்து கொண்டனர். நகராட்சி நிர்வாகம் கழிவுகளை அள்ளுவதோடு கால்வாயை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நகராட்சி மேலாளர் கென்னடி கூறுகையில், மழைக்காலம் வருவதற்குள் சிவகங்கையில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களையும் துார் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். கடைவீதியில் உள்ள கடைகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தகவல் கூறிவிட்டு தான் பணியை செய்து வருகிறோம்.
துார்வாரப்பட்ட கழிவு அனைத்தும் அள்ளப்பட்டு வருகிறது. இரண்டு தினங்களில் அனைத்து பணியும் முடிந்து விடும். நகரில் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களையும் புதிதாக சீரமைத்து கட்டுவதற்கு ரூ.4 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாராகி வருகிறது. விரைவில் அனைத்து கால்வாய்களும் சீரமைக்கப்படும் என்றார்.