/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிறுத்தப்பட்ட பாலப்பணி: தடுமாறும் மக்கள்
/
நிறுத்தப்பட்ட பாலப்பணி: தடுமாறும் மக்கள்
ADDED : செப் 06, 2024 05:04 AM
திருப்புவனம்; திருப்புவனத்தில் கழிவு நீர் கால்வாய் மீது பாலம் கட்டுமான பணிகளை பாதியில் நிறுத்தியதால் தினசரி பொதுமக்கள் பலரும் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
திருப்புவனத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருபுறமும் 20 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கழிவு நீர் கால்வாய் பல இடங்களில் சேதமடைந்து கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி சுகாதாரக்கேடு நிலவி வந்தது. சிவகங்கை ரோடு அருகே உள்ள சாக்கடை கால்வாய் பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கும் மேலாக ரோட்டில் கழிவு நீர் செல்வதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து கழிவு நீர் பாலத்தை உயர்த்தி கட்டும் பணி நடந்து வந்தது. ஒரு சில நாட்களிலேயே பாலத்தின் இருபுறமும் இணைக்காமல் அப்படியே பணிகளை நிறுத்தி விட்டனர். உச்சி மாகாளியம்மன் கோயில் தெருவையும் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் இந்த பாலத்தின் பணிகள் முடிவடையாததால் இப்பாலத்தை கடக்க முயலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினசரி தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
மதுரை மற்றும் திருப்புவனத்தில் இருந்து நரிக்குடி, அல்லிநகரம், கலியாந்துார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இப்பாதையை கடந்து செல்கின்றனர். பாலப்பணிகள் பாதியில் நிற்பதால் மணிமந்திர விநாயகர் கோயில் வழியாக செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. பாலப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் படத்துடன் போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்ட நிலையில் உச்சிமாகாளியம்மன் கோயில் தெரு பகுதி மக்கள் என்ற பெயரில் சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து சிலர் வணிக வளாகம் கட்டியிருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றும் சுவரொட்டி ஒட்டப்பட்டன. மாவட்ட நிர்வாகம் உடனடியாக கழிவு நீர் கால்வாய் பணிகளை நிறைவேற்றி சாலையை சமன்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.