ADDED : மே 31, 2024 06:23 AM
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிப்பறை கழிவுகளை சாக்கடையில் விடுவதை தவிர்க்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளிலும் தற்போது 4500க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பதிக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு புதிதாக குடிநீர் குழாய்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது ஏராளமான தெருக்களில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிப்பறை கழிவுகளை நேரடியாக சாக்கடையில் விடுவதால் தற்போது குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நகராட்சி கமிஷனர் ரெங்கநாயகி கூறியதாவது:
மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய குடிநீர் திட்டத்திற்காக அனைத்து தெருக்களிலும் புதிதாக குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. ஏராளமான வீடுகளிலிருந்து கழிப்பறை கழிவுகளை நேரடியாக சாக்கடையில் விடுவதால் குழாய் பதிப்பு பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர்.
ஆகவே பொதுமக்கள் கழிப்பறை கழிவுகளை தங்களது வீடுகளுக்கு அருகிலேயே செப்டிக் டேங்க் அமைத்து அதில் விட வேண்டும். மீறி சாக்கடையில் கலந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.