ADDED : ஜூன் 06, 2024 06:06 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் பகுதி கண்மாய்களில் நீர் பெருகாததால் குப்பைத் தொட்டிகளாக மாறி வருகிறது.
திருப்புத்துார் பகுதி வானம் பார்த்த பூமி. இந்த வட்டாரத்தில் 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் மழை நீரை சேமிக்க உள்ளன. ஆனால் மழை எதிர்ப்பார்த்த அளவில் பரவலாக பெய்வதில்லை. பெய்யும் மழைநீரும் கண்மாய்க்கு செல்ல முடியாத அளவில் பல வரத்துக்கால்வாய்கள் துார்ந்து விட்டன.
கண்மாய்களுக்கு நீர் வரத்தை தரும் மற்றொரு வாய்ப்பான மணிமுத்தாறு, பாலாறு, விருசுழியாறுகளிலும் போதிய நீர் வரத்து இல்லை. திண்டுக்கல், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் குறைவான மழையாலும் நீர் வரத்து ஆறுகளில் குறைந்து விட்டது.
மேலும் பல தடுப்பணைகள், மணல் திருட்டில் ஏற்பட்ட பள்ளங்களாலும் நீர்வரத்து குறைந்து விட்டது. இக்கண்மாய்கள் பெருகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இதனால் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கண்மாய்கள் குப்பை கொட்டும் இடமாக மாறிவருகிறது.
திருப்புத்துாரில் மணியாரனேந்தல் குப்பைத் தொட்டியாகி விட்டது. தற்போது புதுக்கண்மாய், தென்மாக் கண்மாய்களிலும் குப்பை கொட்டத் துவங்கியுள்ளனர்.
விவசாயப்பரப்பு குறைந்து விட்ட பகுதியில் கண்மாய் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் கவலைப்படுவதில்லை. இதனால் மணல் திருட்டு, ஆக்கிரமிப்பு இவற்றுடன் தற்போது குப்பை கொட்டும் இடமாகவும் கண்மாய்கள் மாறி வருகிறது.
இதனால் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றியத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள கண்மாய்களை தொடர்ச்சியாக கண்காணித்து இது போன்ற தவறு நடக்காமல் பாதுகாக்க வேண்டும்.
குறிப்பாக குப்பை கொட்டுவது போன்றவற்றை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வரத்துக்கால்வாய்களும், கண்மாய்களும் குப்பைத் தொட்டிகளாகி விடும். பின்னர் மழைநீர் சேகரிக்க முடியாமல் நிலத்தடிநீர் பாதிக்கப்படும்.