/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டுக்குடிப்பட்டியில் தேங்கும் கழிவு நீர்
/
கட்டுக்குடிப்பட்டியில் தேங்கும் கழிவு நீர்
ADDED : மே 29, 2024 05:58 AM

எஸ்.புதுார் : எஸ்.புதுார் ஒன்றியம் கட்டுக்குடிப்பட்டியில் வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
மணலூர் ஊராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பிட்ட இடத்தில் நெருக்கடியுடன் அனைத்து வீடுகளும் அமைந்துள்ளதால் வீடுகளில் வரும் கழிவு நீர் வெளியேற முறையான கால்வாய் வசதிகள் இல்லை.
பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய அளவிலான கால்வாய்கள் உடைந்து பல இடங்களில் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுகளை அகற்றி கால்வாய்களை சுத்தப்படுத்த போதிய நடவடிக்கை இல்லை. இதனால் கிராமத்திற்குள் செல்லவே மக்கள் தயங்கும் நிலை உள்ளது.
துர்நாற்றம் மற்றும் கொசுக்கள் காரணமாக கிராமத்தில் உள்ளோர் காய்ச்சல் உள்ளிட்ட வியாதிகளால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.
எனவே கிராமத்தில் கழிவு நீர் தேங்காதவாறு அளவீடு செய்து தேவையான கால்வாய்கள் கட்டவும், தற்காலிகமாக கழிவு நீரை அகற்றவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.