/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்பாச்சேத்தியில் மின் டிரான்ஸ்பார்மர் பழுது தண்ணீரின்றி கருகும் 150 ஏக்கர் கரும்பு
/
திருப்பாச்சேத்தியில் மின் டிரான்ஸ்பார்மர் பழுது தண்ணீரின்றி கருகும் 150 ஏக்கர் கரும்பு
திருப்பாச்சேத்தியில் மின் டிரான்ஸ்பார்மர் பழுது தண்ணீரின்றி கருகும் 150 ஏக்கர் கரும்பு
திருப்பாச்சேத்தியில் மின் டிரான்ஸ்பார்மர் பழுது தண்ணீரின்றி கருகும் 150 ஏக்கர் கரும்பு
ADDED : ஜூலை 10, 2025 02:51 AM

சிவகங்கை: திருப்பாச்சேத்தி அய்யனார் கோயில் அருகே உள்ள மின் டிரான்ஸ்பார்மர் பழுதால், மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் தண்ணீரின்றி கரும்பு காய்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
படமாத்துார் சக்தி சர்க்கரை ஆலைக்கு திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மானாமதுரை உட்பட மாவட்ட அளவில் இருந்து விவசாயிகள் கரும்பு நடவு செய்து, அனுப்புவர். இந்த ஆண்டிற்கான கரும்பு நடவினை விவசாயிகள் ஜனவரியில் துவக்கினர். தற்போது கரும்பு 6 மாத பயிராக வளர்ந்துள்ளது. ஒரு ஆண்டிற்கு பின்னரே கரும்பு அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கு அனுப்புவார்கள்.
திருப்பாச்சேத்தியில் 30 க்கும் மேற்பட்ட விவசாயிகள் 150 ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். இவர்களது நிலத்திற்கு அய்யனார் கோவில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் இணைப்பு கொடுத்துள்ளனர். சில மாதங்களாக இந்த மின் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுதாகி வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரை பழுது நீக்குவதோடு, கூடுதலாக ஒரு மின்டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும் என கரும்பு விவசாயிகள் கடந்த ஆண்டே மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.
மின்வாரியம் புதிய மின்டிரான்ஸ்பார்மர் பொருத்த தேவையான மின்கம்பம், மின் வயர்களை போட்டதோடு, இணைப்பு வழங்கவில்லை. தற்போதுள்ள ஒரே ஒரு மின்டிரான்ஸ்பார்மரில் இருந்து குறைந்த அழுத்த மின்சப்ளை ஆவதால், விவசாய தேவைக்கான மும்முனை மின்சாரம் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதனால் நடவு செய்துள்ள கரும்புக்கு வாரம் ஒரு முறை முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கின்றனர். இதனால், 6 மாதம் வரை விளைந்த கரும்பு கருகி வருகின்றன.
2 நாட்களுக்கு ஒரு முறை மின்சப்ளை
திருப்பாச்சேத்தி விவசாயி மருது கூறியதாவது: 150 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு 100 கே.வி., திறன் உள்ள 2 மின் டிரான்ஸ்பார்மர் இருந்தால் மட்டுமே, அனைத்து மின் மோட்டார்களுக்கும் உரிய மின்சாரம் கிடைத்து, கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். தற்போதுள்ள ஒரு மின் டிரான்ஸ்பார்மர் பழுதாகி வருவதால், இரண்டு பகுதியாக பிரித்து 2 நாட்களுக்கு ஒரு முறை தான் மின்சப்ளை கிடைக்கிறது. இதனால், உரிய நேரத்திற்கு கரும்புக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவிக்கிறோம். இது குறித்து சிவகங்கை மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்றார்.