/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வனத்துறை அனுமதிக்காக 16 சாலைப்பணிகள் காத்திருப்பு
/
வனத்துறை அனுமதிக்காக 16 சாலைப்பணிகள் காத்திருப்பு
ADDED : அக் 18, 2024 05:15 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் வனப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றியம், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள 16 ரோடுகள் அனுமதி கிடைக்காமல் புதுப்பிக்க முடியாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
திருப்புத்துார் மற்றும் சிங்கம்புணரி தாலுகாவில் மட்டும் வனப்பகுதி வழியாக செல்லும் 16 ரோடுகள் புதுப்பிக்க வனத்துறை அனுமதிக்காக காத்திருக்கின்றன.
அனுமதியை பெற வனத்துறைக்கு ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட துறையினர் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது விண்ணப்பித்து பல மாதங்களாகியும் வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை. காப்புக்காடுகள் என்றால் மத்திய வனத்துறை அனுமதி பெற 6 மாதங்களுக்கு மேலாகும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக திருப்புத்துார் பகுதியில் வேலங்குடி -மகிபாலன்பட்டி, வேலங்குடி -கொன்னத்தான்பட்டி, துவார்- வேலங்குடி ஆகிய ரோடுகள் உள்ளன. அது போல வடக்கூர்- திருக்களம்பூர் ரோடும் ஒன்று. அதில் புதுக்கோட்டை பகுதியில் வனத்துறை அனுமதி கிடைத்து திருக்களம்பூர் வரை ரோடு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை பகுதியிலுள்ள ரோடு மட்டும் வனத்துறை அனுமதியில்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆண்டுக்கணக்கில் ரோடுகள் புதுப்பிக்கப்படாததால் அப்பகுதியினர் போக்குவரத்திற்கு சிரமப்படுகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் இதற்கு முன்னெடுப்பு செய்து இந்த விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து வனத்துறை அனுமதி கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.