/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிறாவயல் மஞ்சுவிரட்டில் 2 பேர் பலி
/
சிறாவயல் மஞ்சுவிரட்டில் 2 பேர் பலி
ADDED : ஜன 17, 2025 12:34 AM

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகேயுள்ள சிறாவயலில் நடந்த மஞ்சு விரட்டில் காளைகள் குத்தியதில் ஒருவர் இறந்தார். 3 போலீசார் உட்பட 117 பேர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டு முடிந்து திரும்புகையில் கண்மாயில் மூழ்கி காளையும், காளை உரிமையாளரும் இறந்தனர்.
நேற்று காலை 11:00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி அம்பலம் தலைமையில் கிராமத்தினர் ஊர்வலமாக வந்து பெரிய நாயகி அம்மன் கோயில், தேனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு செய்தனர். பின்னர் மஞ்சுவிரட்டு பொட்டலில் உள்ள தொழுவிற்கு மரியாதை செலுத்தினர்.
மஞ்சுவிரட்டு உறுதிமொழியை கலெக்டர் ஆஷா அஜித் கூற மாடுபிடி வீரர்கள் ஏற்றனர். அமைச்சர் பெரிய கருப்பன் கொடியசைத்து மஞ்சுவிரட்டை துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ, மாங்குடி, எஸ்.பி.ஆஷிஸ் ராவத், சப் கலெக்டர் ஆயுஷ் வெங்கட், டி.ஆர்.ஓ., செல்வசுரபி, கால்நடைத்துறை இணை இயக்குநர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காலை 11:45மணிக்கு முதல் காளையாக தொழுவிலிருந்து பெரியநாயகி அம்மன் கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. தொடர்ந்து தேனாட்சியம்மன் காளை உள்ளிட்ட கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டன. பதிவு செய்யப்பட்ட காளைகளில் 8 காளைகள் நிராகரிக்கப்பட்டு 301 காளைகள் பங்கேற்றன. மாடு பிடி வீரர்களில் 16 பேர் நிராகரிக்கப்பட்டு 149 வீரர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான காளைகள் வீரர்களிடம் சிக்காமல் சென்றன.
காளைகளை பிடித்தவர்களுக்கும், வெற்றி பெற்ற மாடு உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் 117 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த ஏ.டி.எஸ்.பி. கலைக்கதிரவன், திருப்புத்துார் எஸ்.ஐ.விஜயன், காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் தேவி ஆகியோர் காயமடைந்தனர். பெரிய உஞ்சனையைச் சேர்ந்த சுப்பையா45 என்பவர் வலது தொடையில் காளை குத்தியதில் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
கல்லல் ஒன்றியம் கீழஆவந்திப்பட்டியைச் சேர்ந்த தைனீஸ்ராஜா என்பவர் மஞ்சுவிரட்டு முடிந்து காளையுடன் திரும்புகையில் கம்பனுார் கண்மாயில் காளை ஓடியது. கயிறுடன் தைனீஸ்ராஜாவையும் இழுத்து சென்றதில் தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கி காளையும், தைனீஸ்ராஜாவும் உயிரிழந்தனர்.