/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 1227 விபத்துக்களில் 300 பேர் பலி
/
சிவகங்கையில் 1227 விபத்துக்களில் 300 பேர் பலி
ADDED : நவ 06, 2024 07:57 AM
சிவகங்கை : மாவட்ட அளவில் நவ., 4ம் தேதி வரை நடந்த பல்வேறு விபத்துக்களில் 300 பேர் பலியாகியுள்ளனர். வாகன சோதனையில் ெஹல்மெட் அணியாமல் வந்ததாக 1.75 லட்சம் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை, தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் வழியே செட்டிநாடு சுற்றுலா தலம், ராமேஸ்வரம் ஆன்மிக தலத்திற்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் தினமும் பயணித்து வருகின்றனர். இது தவிர கார், டூவீலர்களில் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். இதில், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவோர், வளைவுகளில் கவனமின்றி ஓட்டுதல், அதிவேகமாக ஓட்டுதல் போன்ற காரணத்தால், அடிக்கடி விபத்துக்கள் நேரிடுகின்றன.
அந்த வகையில் மாவட்ட அளவில் கடந்த ஆண்டு 1227 வாகன விபத்துக்களில் சிக்கி 397 பேர் பலியாகியுள்னர். இதில், 849 பேர் காயமுற்றனர். இந்த ஆண்டு ஜன., முதல் நவ., 4 ம் தேதி வரை 1000 விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்தில் இது வரை 300 பேர் பலி, 668 பேர் வரை காயமுற்றனர். மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சிவகங்கை சப் டிவிஷனில் 180 விபத்துக்கள் நடந்ததில், 50 பேர் பலியாகியுள்ளனர்.
மது அருந்தி வாகனம் ஓட்டியதாக மட்டுமே 6000 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இம்மாவட்டத்தில் சராசரியாக விபத்துக்கள் மூலம் 300 பேர் வரை பலியாகின்றனர். இதில், டூவீலர் விபத்துக்களின் இறந்தவர்கள் தான் அதிகளவில் உள்ளனர்.
டூவீலர் மீது கார், வேன், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகள் மோதியது மற்றும் கட்டுப்பாட்டை இழந்து மரம், தடுப்புச்சுவரில் மோதிய சம்பவங்களால் அதிக விபத்துக்கள் நேரிட்டுள்ளன. அதி வேகமாக சென்றதாக 8494 பேர், அலைபேசி பேசி ஓட்டியதாக 13,110 பேர், ெஹல்மெட் அணியாமல் சென்றதாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.