ADDED : பிப் 18, 2024 12:58 AM

திருப்புவனம்: மதுரை-பரமக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள மேம்பாலங்கள் போதிய பராமரிப்பு இன்றி விரிசல் ஏற்பட்டு வருவதாக தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதையடுத்து பாலங்களை அதிகாரிகள் சரி செய்தனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. 2017 முதல் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி, போகலூர் ஆகிய இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான பாதையில் புளியங்குளம், மணலூர், திருப்புவனம், லாடனேந்தல், மானாமதுரை, கமுதக்குடி உள்ளிட்ட இடங்களில் ரயில் பாதையை கடப்பதற்கும் , பைபாஸ் ரோட்டிலும் ஒன்பது மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த பாலங்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் விரிசல் ஏற்பட்டதுடன் இடைவெளியும் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து பாலங்களை சரி செய்யும் பணி தொடங்கியது.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: நான்கு வழிச்சாலை பராமரிப்பு பணிக்காக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமிக்கப்படுவார்கள், இந்தாண்டு பணிகளை எடுத்த நிறுவனம் சற்று தாமதமாக பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் நான்கு வழிச்சாலையில் உள்ள அனைத்து பாலங்களின் பராமரிப்பும் மேற்கொள்ளப்படும், என்றனர்.