/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மதகுபட்டி அடகு கடையில் 300 பவுன் கொள்ளை
/
மதகுபட்டி அடகு கடையில் 300 பவுன் கொள்ளை
ADDED : அக் 01, 2024 05:32 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் உள்ள நகை அடகு கடையில் 4 மாதங்களுக்கு முன் சுவரில் துளையிட்டு 300 பவுன் நகைகளை கொள்ளை அடித்த கொள்ளையர்கள் நேற்று விழுப்புரம் அருகே தனிப்படை போலீசாரிடம் சிக்கினர்.
மதகுபட்டி அருகே சிங்கினிபட்டியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவர் மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே தச்சம்புதுப்பட்டி ரோட்டில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். ஜூன் 8 இரவு கடைக்கு வாட்ச்மேன் வரவில்லை. இதை பயன்படுத்திய நபர்கள் கடையின் பக்கவாட்டு சிமென்ட் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து அங்கிருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த 300 பவுன் நகைகள், பணத்தை கொள்ளையடித்து தப்பினர். பாண்டித்துரை மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார்.
சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் சம்பவ இடத்தை ஆய்வு செய்து கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைத்தார். தனிப்படையினர் 4 மாதமாக கோயம்பத்துார், கன்னியாகுமரி, திருச்சி, சென்னை என பல இடங்களில் முகாமிட்டு கொள்ளையர்களை தேடினர்.
நேற்று விழுப்புரம் பகுதியில் இருவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடம் இந்த கொள்ளை சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை எங்கு வைத்துள்ளனர். இதுபோன்று வேறு எங்கு எங்கு கொள்ளை அடித்தார்கள் என்று விசாரித்து வருகின்றனர்.