/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பச்சைப்பசேலென காட்சியளிக்கும் வயல்
/
பச்சைப்பசேலென காட்சியளிக்கும் வயல்
ADDED : நவ 08, 2024 04:26 AM

திருப்புவனம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டுள்ளதால் வயல்கள் பச்சைப்பசேல் என காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் ஆகஸ்டில் தொடங்க வேண்டிய பருவமழை தாமதமாக அக்டோபரில் தொடங்கியது. திருப்புவனம் தாலுகா விவசாயிகள் பலரும் வடகிழக்கு பருவமழையை நம்பி காலம் பருவத்திற்கு நெல்நடவு பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
இந்தாண்டு தாமதமாக மழை பெய்தாலும் விவசாயிகள் நெல் நடவில் ஈடுபட்டு வருகின்றனர். என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., கோ 50, கோ 51, கல்சர் பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை பயிரிட தொடங்கியுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி சுமார் பத்தாயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வேளாண் விரிவாக்க மையம் மூலம் 50 டன் விதை நெல் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இதுதவிர பெரும்பாலான விவசாயிகள் கடந்தாண்டு விளைச்சலின் போதே விதை நெல் எடுத்து வைத்து நடவு பணிகளை தொடங்கியுள்ளனர்.
திருப்புவனம் வட்டாரபொதுப்பணித்துறை கண்மாய்களில் ஒரு சில கண்மாய்கள் தவிர மற்ற கண்மாய்களில் 50 சதவிகித நீர் இருப்பு உள்ளது. பிரமனுார், மாரநாடு கண்மாய்கள் நிரம்பி உள்ளன. தற்போது மழை நீரை வைத்து நெல்நடவு பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் சிவகங்கை மாவட்டத்திற்கு வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம், தற்போது கண்மாய்களில் உள்ள தண்ணீர் ஜனவரி வரை பயன்பாட்டிற்கு வரும் அதன்பின் வைகை அணையிலும் நீர் திறக்கப்படும் போது முழு அளவில் விளைச்சல் காண வாய்ப்புண்டு.
பெரும்பாலான விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபட்டு வருவதால் திருப்புவனம் வட்டாரத்தில் எங்கு திரும்பினாலும் பச்சைப்பசேல் என வயல்கள் காட்சியளிக்கின்றன.