ADDED : மே 21, 2025 12:16 AM
தேவகோட்டை : தேவகோட்டையில் பல ஆண்டுகளாக மயானமே இல்லாத நிலையில் பல கட்ட போராட்டங்கள், சட்ட போராட்டங்களுக்கு பிறகு ராம்நகர் எல்லையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மயானம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அரசின் மூலதன வருவாய் திட்டத்தில் 80 லட்சத்தில் 2017 ல் நிதி ஒதுக்கி நவீன மயானம் கட்டப்பட்டது. 5 ஆண்டுகளாகியும் செயல்படாமல் மூடியே கிடக்கிறது.
இந்நிலையில் தமிழக அரசு கூடுதல் நிதி செலவழித்து நவீன எரிவாயு தகன மயானமாக மாற்றியது. அந்த பணிகளும் முடிந்து விட்டது. தொண்டு நிறுவனம் நடத்தி வருபவருக்கு குத்தகைக்கும் விடப்பட்டது. அவரும் எரிவாயு சிலிண்டர் பொருத்தி விட்டார்.
ஆனால் தகனம் மயானத்தை அமைத்த நிறுவனத்தினர் டெமோ செய்து பயிற்சியளிக்கவில்லை. அதற்கான ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள் செய்யாமல் அலட்சியமாக இருக்கின்றனர்.
நகர மக்கள் இறந்தவர்களின் உடல்களை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள மயானத்தில் எரிப்பதில் சிரமம் உள்ளதாக கூறி ஹிந்து முன்னணி சார்பில் போராட்டம் அறிவித்தனர். அதற்கு போலீசார் ஏப். 1 முதல் நவீன மயானம் செயல்படும் என்று கூறி அனுமதி மறுத்து விட்டனர்.
இந்நிலையில் இன்று வரை மயானம் செயல்பாட்டுக்கு கொண்டு வர வில்லை. இன்று மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தேவகோட்டையில் முகாமிட்டு அரசு அலுவலகங்கள், பணிகளை பார்வையிட உள்ளார். மாலையில் ராம்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் மனுக்களை பெறுகிறார்.
கலெக்டர் நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கும் மயானத்திற்கும் சிறிது தூரம் தான். எனவே கலெக்டர் சம்பந்தப்பட்ட மயானத்தை பார்வையிட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.