/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தரணியெல்லாம் தடம் பதிக்கும் தஞ்சை ஓவியம்
/
தரணியெல்லாம் தடம் பதிக்கும் தஞ்சை ஓவியம்
ADDED : அக் 01, 2025 09:04 AM

கா ரைக்குடி கலைஞர்கள் தரணி போற்றும் தஞ்சை ஓவியத்தை, நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் உலகளவில் கொண்டு சேர்த்து ஓவியத்திற்கு மேலும் பெருமை சேர்த்து வருகின்றனர்.
அழகை மட்டுமே பிரதிபலித்த ஓவியம் காலப்போக்கில், கலை, நாகரீகம், பண்பாடு, இயற்கை, ஆன்மிகம், சமூகம், கலாசாரம் என மனிதனின் மொத்த உணர்வுகளை வெளிப்படுத்தும் கருவியாக விளங்கியது.
பாதுகாக்கப்பட்ட பொக்கிஷமாக இன்றளவும் அனைவரும் விரும்பக்கூடிய ஓவியமாக விளங்குவது தஞ்சை ஓவியமாகும். நாயக்கர்கள், மராட்டியர்கள், ஆங்கிலேயர் காலங்களில் பாதுகாக்கப்பட்டு, பின்பு புத்துயிர் பெற்ற சிறந்த கலையாக தஞ்சாவூர் ஓவியம் விளங்கி வருகிறது.
தஞ்சை ஓவியத்தின் பிறப்பிடம் தஞ்சையாக கூறப்பட்டாலும், கலைஞர்களின் ஆர்வத்தால், இன்று தரணி முழுவதும் தஞ்சை ஓவியத்தின் புகழ் நீண்டு கொண்டே செல்கிறது.
அதில் காரைக்குடி கலைஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு.
காரைக்குடி பகுதியில் தஞ்சை ஓவியம் தயார் செய்யும் பணியில் ஏராளமான கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் உள்ளூர் மட்டுமின்றி, பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு நேரடியாகவும் ஆன்லைன் மூலமும் வழங்கி வருகின்றனர்.
காரைக்குடி மணிமேகலை ஆர்ட்ஸ், தஞ்சாவூர் ஓவிய கலைஞர் சுப்பிரமணியன் கூறுகையில்:
பாரம்பரிய ஓவியமாக விளங்கும் தஞ்சை ஓவியத்தின் படைப்பு பிரமிக்கத்தக்கது. எவ்வளவு தான் நவ நாகரீக உலகமாக மாறினாலும், பாரம்பரியத்திற்கும், பழமைக்கும் என்றும் தனி மவுசு உண்டு. அந்த வகையில் தஞ்சை ஓவியம் பலரும் விரும்பும் பாரம்பரிய கலையாக விளங்கி வருகிறது. தஞ்சை ஓவியம் இந்தியாவில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் வெளி நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
அக்காலத்தில் மன்னர்கள் பிற நாட்டு மன்னர்களுக்கு பரிசாக தஞ்சாவூர் ஓவியத்தையே வழங்கினர். இவ்வகை ஓவியத்திற்கு துாய தங்கமே பயன்படுத்தப்படுகிறது.
ஜெய்ப்பூரில் மட்டுமே கிடைக்கக்கூடிய, ஓவியத்திற்கு தேவையான தங்க இலைகள் மற்றும் கற்கள் சென்னையில் கிடைக்கிறது. முழுக்க முழுக்க ஆன்மிக படங்கள் மற்றும் நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் படங்களாகவே தஞ்சாவூர் ஓவியம் விளங்குகிறது.
அறிவியல் வளர்ச்சியின் உதவியால் இன்று ஆன்லைன் மூலம் விற்பனை அதிகளவில் நடைபெறுகிறது. ஏராளமானோர் தங்களுக்கு தேவையான ஓவியங்களை ஆன்லைன் மூலம் எளிதாக தேர்வு செய்து பெற்று கொள்கின்றனர். ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வரை ஓவியத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது. தவிர, ஆர்வம் உள்ளவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது, தொடர்புக்கு - 63823 87631