/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதர் மண்டிய வைகை ஆற்றில் சங்கமிக்கும் சாக்கடை
/
புதர் மண்டிய வைகை ஆற்றில் சங்கமிக்கும் சாக்கடை
ADDED : ஜன 22, 2025 09:03 AM

திருப்புவனம் : குடிநீர் மற்றும் பாசன தேவையை பூர்த்தி செய்யும் வைகை ஆற்றை சுத்தம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு சிவகங்கை மாவட்டத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
தேனியில் தொடங்கி ராமநாதபுரம் வரை 258 கி.மீ., நீளமுள்ள வைகை ஆறு பல இடங்களில் நாணல், கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. வைகை ஆற்றின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
திருப்புவனம் வட்டாரத்தில் மாரநாடு, பழையனுார், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார் உள்ளிட்ட கண்மாய்கள் வைகை தண்ணீரை நம்பியே உள்ளன. ஒவ்வொரு வருடமும் வடகிழக்கு பருவமழையின் போது தண்ணீர் திறக்கப்பட்டாலும் சிவகங்கை மாவட்டத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக கண்மாய்களுக்கு செல்வதில்லை. வைகை ஆறு முழுவதும் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், நாணல் நீரோட்டத்தை தடுத்து வருகின்றன. மேலும் பல இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக வைகை ஆறு சுருங்கிவிட்டது.
350 மீட்டர் அகலமுள்ள வைகை ஆறு பல இடங்களில் 200 மீட்டர் தான் உள்ளது. வைகை ஆற்றை ஒட்டியுள்ள உள்ளாட்சி அமைப்பு பலவும் வைகை ஆற்றை குப்பை கிடங்காக மாற்றி விட்டன.
தொடர்ச்சியாக குப்பை கொட்டியதால் வைகை ஆற்றில் நீர் திறக்கப்பட்டாலும் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் போது கருப்பு நிறத்தில் சுகாதார கேட்டுடன் தான் வருகிறது.
சிவகங்கை மாவட்ட எல்லையான மணலுாரில் தொடங்கி பார்த்திபனுார் மதகு அணை வரை 72 கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் அருப்புக்கோட்டை, மதுரை நகருக்கு திருப்புவனம் பகுதி வைகை ஆற்றில் இருந்துதான் குடிநீர் செல்கிறது. பல ஆண்டுகளாக வைகை ஆறு சுத்தம் செய்யப்படவே இல்லை. ஒருசில இடங்களில் தன்னார்வலர்கள் சுத்தம் செய்தாலும் முழுமையடையவில்லை.
வைகை ஆற்றை சுத்தம் செய்ய பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மதுரை உள்ளிட்ட வைகை ஆற்றை ஒட்டியுள்ள நகரங்களின் ஒட்டுமொத்த சாக்கடையும் வைகை ஆற்றில் தான் விடப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் இன்று வரை நடவடிக்கை இல்லை. சிவகங்கைக்கு வரும் முதல்வர் வைகை ஆற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.