ADDED : அக் 31, 2025 12:13 AM
சிங்கம்புணரி:  சிங்கம்புணரி பகுதி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் விளம்பரம் அடங்கிய பேரிகார்டுகளால் விபத்து அபாயம் உள்ளது.
காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்ட எல்லையான வேட்டையன்பட்டியில் இருந்து சிங்கம்புணரி, அ.காளாப்பூர், மருதிபட்டி, எம்.கோவில்பட்டி வழியாக திருப்புத்தூர் வரை பல இடங்களில் வாகன வேகத்தை ஒழுங்குபடுத்த போக்குவரத்து போலீசாரால் பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இவை பெரும்பாலும் தனியாரிடம் இருந்து ஸ்பான்சர் பெற்று வைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் அந்தந்த நிறுவனத்தின் விளம்பரங்கள், நடிகைகளின் படங்கள் பெரிய அளவில் அச்சிடப்பட்டுள்ளன.  பேரிக்கார்டுகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை கவனமாக கடக்க வேண்டிய நிலையில், இந்த விளம்பர ஸ்டிக்கர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து அபாயம் நிலவுகிறது.
எம்.கோவில்பட்டி, மருதிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் பலர் விபத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
எனவே போலீசார், பேரிக்கார்டுகளில் தனியார் விளம்பரங்கள் இல்லாமல், எச்சரிக்கை வாசகங்களையும், பிரதிபலிக்கும் ஸ்டிக்கர்களையும் முறையாக ஒட்டி அமைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

