
கண்டவராயன்பட்டி அருகே நல்லிப்பட்டியில் 250 ஏக்கரில் ஆண்டு தோறும் நெல் சாகுபடி செய்வர். இவர்கள் புரட்டாசியில் நேரடி விதைப்பு செய்தனர். ஆனால் தேவையான மழை பெய்யவில்லை.
நாற்று நிமிர்ந்த போது தொடர்ந்து மழை பெய்ததால் பகுதி நாற்றுக்கள் அழுகி விட்டன. பின்னர் மீண்டும் விலைக்கு நாற்று வாங்கி நடவு செய்துள்ளனர். அவையும் வளர்ச்சியடையாமல் பரியத் துவங்கி விட்டன. இதனிடையே இலைச்சுருட்டு புழு, செவ்வாழை தாக்குதல் துவங்கி விட்டன.
பயிர்களை நோய், பூச்சி தாக்கியதாகவும், அதையும் சமாளித்து ஓரளவு பயிரை பாதுகாத்துள்ளோம். ஆனால் எதிர்பார்த்த மகசூல் கிடைக்குமா என்று தெரியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.
நல்லிவயல் ஆனந்தன் கூறுகையில், என் பயிருக்கும் செவ்வாழை தாக்கி ஜிங்க் சல்பேட் போட்டு சமாளித்தேன். இருந்தாலும் ஒரு பகுதி பயிர் வளர்ச்சி பாதித்து விட்டது. விதைப்பு போட்டவங்களுக்கு நோய் தாக்குதல் அதிகம். நாற்று நட்டவர்களுக்கு பாதிப்பு குறைவு. விதைத்த நிலையில் அழுகியதால் இங்கே பலரும் தொழி நாற்று நட்டார்கள்.
முத்தின நாற்று நட்டதால் உடனடியாக பரிகிறது. வழக்கமாக ஏக்கருக்கு 30 மூடை வரும். இப்போது 20 மூடை வந்தால் சாப்பாட்டுக்கு கவலை இல்லை' என்றார்.
வேளாண்துறையினர் கூறுகையில், விவசாயிகள் நாற்றங்கால் போட்டு தயார் நிலையில் இருந்தால் மழை பெய்வதற்கேற்ப சாகுபடி செய்யலாம். அப்போது தான் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். முற்றிய நாற்றுக்களை நட்டால் உட்கார்ந்து வளராது. விரைவாக கதிர் விட ஆரம்பிக்கும். இந்நேரங்களில் பச்சையாக உள்ள பயிரை இலைச்சுருட்டு, தண்டுப்புழு தாக்குதல் துவங்கும்.
மாறி, மாறி மழை பெய்வதால் மருந்து அடித்தால் கரைந்து விடும். மாற்றாக விவசாயிகள் வேப்ப எண்ணெய் 3 மி.லி.யை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அடியுரமாகவும் போடலாம். இதனால் பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தலாம்' என்றனர்.
பல கண்மாய்களில் நீர் இருந்தும் நெல் சாகுபடி நடைபெறவில்லை. விவசாயத்தை தொழிலாக நினைப்பவர்களே தொடர்கின்றனர். தொழிலாளர் பற்றாக்குறை, பருவம் தவறிய மழை, நோய், பூச்சி தாக்குதல் என்று போராடியே வருகின்றனர்.
கண்டவராயன்பட்டி, நவ. ௨௦-
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வட்டாரத்தில் இந்த ஆண்டு 6 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பருவம் தவறிய மழை, நேரடி விதைப்பு, முற்றிய நாற்று நடவு போன்ற காரணங்களால் நெல் மகசூல் பாதிக்கும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.