ADDED : ஏப் 04, 2026 04:56 PM
திருப்புத்துார்:திருப்புத்துார் தொகுதியில் அ.தி.மு.க.,கூட்டணியில் பரபரப்பு மாற்றங்களுடன் 2026 தேர்தலை கட்சியினர் சந்திக்கின்றனர். திடீர் எதிப்பாரா திருப்பங்களால் ‛சைலன்ட் மோடு' க்கு மாறிய தொண்டர்களை உற்சாகப்படுத்தும் முயற்சிகளை கட்சி நிர்வாகிகள் துவங்க உள்ளனர்.
திருப்புத்துார் தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை அ.தி.மு.க.,வை தோல்வியடையச் செய்து தி.மு.க.,வெற்றி பெற்றதை அடுத்து இம்முறை கடுமையான போட்டியை தரும் வகையில் வேட்பாளர் அறிவிப்பை அ.தி.மு.க., தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப அ.தி.மு.க.,வில் இரு நிர்வாகிகள் ‛சீட்' கேட்டு கடுமையாக தலைமையிடம் போட்டியிட்டனர். ஒருவர் திருப்புத்துாரில் தேர்தல் அலுவலகமே அமைத்தார்.மற்றொருவர் தொடர் போஸ்டர்களால் தொகுதியை கலக்கினார். பழனிசாமி திருப்புத்துார் வருகையின் போது இருதரப்பினருக்கும் பேனர் வைப்பதில் கூட கடுமையான போட்டி. கூட்டம் சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டினர்.
'‛யாருக்கு சீட் கிடைக்கும்' என்று அ.தி.மு.க.,வினர் மட்டுமின்றி, தொகுதியில் பலரும் எதிர்பார்த்த நிலையில் திருப்புத்துார் தொகுதி கூட்டணிக் கட்சியான பா.ஜ.,விற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் ‛சைலன்ட்' மோடிற்கு அ.தி.மு.க.,வினர் மாறினர்.
இதனிடையே பா.ஜ.வில் ஓராண்டிற்கு முன்பாக போட்டியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், முன்னாள் வேட்பாளர்,கல்லுாரி பிரமுகர் உள்ளிட்ட சிலர் போட்டியிட சீட் கேட்டு கடும் முயற்சி மேற்கொண்டனர். அதிலும் கடும் போட்டி காணப்பட்டது. இந்நிலையில் 'பா.ஜ.,போட்டியிடவில்லை. அதன் கூட்டணிக்கட்சியான தென் இந்திய பார்வர்ட் ப்ளாக் போட்டியிடும்' என்று கூறி பா.ஜ., மேலிடம் அதற்கான வெளியூர் வேட்பாளரையும் அறிவித்தது. இதனையடுத்து பா.ஜ., தொண்டர்களும் சைலன்ட் மோடிற்கு மாறினர்.
நாளை வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ள நிலையில் இருதரப்பினரையும் சகஜ நிலைக்கு மாற்றி ‛தேர்தலை சந்திக்க' அ.தி.மு.க., பா.ஜ., கட்சி நிர்வாகிகள் முயற்சிகளை துவங்கியுள்ளனர்.
