சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக நடத்தப்பட்ட துளிர் திறனறிதல் தேர்வை தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம், திருப்புத்துார், தேவகோட்டை, சாக்கோட்டை, இளையான்குடி உள்ளிட்ட ஒன்றியங்களில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்து கொண்டனர்.
போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு இளநிலை எனவும், 9, 10 வகுப்புகளுக்கு உயர்நிலை, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மேல்நிலை என மூன்று பிரிவுகளில் தேர்வுகள் நடந்தது.
தேர்வு எழுதிய அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி செய்தார்.
மாவட்ட தலைவர் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், கவுரவ தலைவர் சாஸ்தா சுந்தரம், மாவட்டப் பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் தேர்வை நடத்தினர்.