ADDED : பிப் 21, 2024 11:59 PM
சிவகங்கை- தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு கலைத் திருவிழா நடத்தப்பட உள்ளது.
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கலை மற்றும் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணரும் விதமாக இவ்வாண்டு 2023-24ல் பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் கொண்டாடப்படவுள்ளது.
போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். பள்ளி அளவிலான போட்டிகள் பிப்.27,28,29ம் தேதியும், வட்டார அளவில் மார்ச் 5,6,7, மாவட்ட அளவில் போட்டிகள் மார்ச் 12,13, மாநில அளவில் மார்ச் 19,20ம் தேதி நடக்கிறது.
மாணவர்களுக்கு வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல், கதை சொல்லுதல், மாறுவேடப் போட்டி, கைவினை பொருட்கள் செய்தல், பாரம்பரிய நடனம், கருவி இசை இசைத்தல், பாட்டுப் போட்டி, கண்காட்சி, பேச்சுப் போட்டி, நாட்டிய நாடகம், பலகுரல் உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.