/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: திருப்புத்துாரில் நடராஜர் வீதி உலா
/
கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: திருப்புத்துாரில் நடராஜர் வீதி உலா
கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: திருப்புத்துாரில் நடராஜர் வீதி உலா
கோயில்களில் ஆருத்ரா தரிசனம்: திருப்புத்துாரில் நடராஜர் வீதி உலா
ADDED : ஜன 04, 2026 06:05 AM

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அபிஷேகம் நடந்து, அலங்காரத்தில் வீதி உலா நடந்தது.
திருத்தளிநாதர் கோயிலில் இசைத்துாண்கள் நிறைந்த நடராஜர் சன்னதியில் இறைவன் இறைவிக்காக கெளரி தாண்டவம் ஆடிய சிறப்பு பெற்றது.
இதனால் தென் சிதம்பரம் என அழைக்கப்படும் இக்கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு விழா கொண்டாடப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் பிரகாரம் வலம் வந்து உற்ஸவ நடராஜர்-சிவகாமி அம்மன் மூலவர் சன்னதியில் எழுந்தருளினர். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மார்கழி திருப்பள்ளியெழுச்சி பூஜைகள் நடந்தன.
பின்னர் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர்-அம்பாள் திருநாள் மண்டபம் எழுந்தருளி அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து நடராஜர் மூலவர் சன்னதியில் மாணிக்கவாசகர் எழுந்தருளி அவர் சார்பில் ஓதுவார் மாசிலாமணி 21 தேவாரப்பாடல்கள் பாடினார். அடுத்து மாணிக்கவாசகருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டது. அலங்காரத்தில் அருள்பாலித்த நடராஜருக்கு தீபாராதனை நடந்தது.
மாணிக்கவாசகர் திருநாள் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து தேவாரம், திருவாசகம் பாடப்பட்டு நடராஜர்-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
* மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவாதிரை விழாவை முன்னிட்டு சோமநாதர் சன்னதியில் மூலவர் நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் நடந்தது.
மூலவருக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. உற்ஸவர் சிவகாமி அம்பாள் சமேதராக மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய பின்னர் நடராஜருக்கு தீபாராதனை நடைபெற்றது.
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசன விழாவில் நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றது.
தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள மூலவர், உற்ஸவர் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நடராஜர் அலங்காரம் செய்யப்பட்டு ருத்ராட்ச வாகனத்தில் வீதி உலா வந்தார்.
*நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் வளாகத்தில் உள்ள சிவகாமி சமேத நடராஜர், சவுபாக்ய துர்க்கை அம்மன் வளாகத்தில் திருக்கயிலேஸ்வரர், நடராஜர், ஆலமரத்து முனீஸ்வரர் கோயிலில் உள்ள சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன.
* முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரத்தில் நடராஜர் சிவகாமி அம்பாள் காட்சியளித்தனர். சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருவெம்பாவை பாடப்பட்டு சுவாமி திருவீதி உலா நடந்தது.
பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு, சுவாமி திருவீதி உலா நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

