ADDED : ஆக 21, 2025 06:45 AM
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்தில் சிக்கியதில் 5 மாணவிகள் காயமடைந்தனர்.
சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்லுாரி நேரத்தில் சென்றுவர பஸ் வசதி கிடையாது. இவர்களில் பெரும்பாலான மாணவிகள் ஆட்டோக்களில் செல்கின்றனர். மாணவிகளை ஏற்றி செல்லும் ேஷர் ஆட்டோக்கள் வேகமாக செல்வதாக புகார் உள்ளது.
நேற்று ஆர்.டி.ஓ., கருப்பணன் கல்லுாரி ரோட்டில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக கல்லுாரி மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர் வேறு வழியாக செல்லத் திட்டமிட்டு வேகமாக ஆட்டோவை திருப்ப முயன்றார். ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. ஆட்டோவில் பயணம் செய்த 9 மாணவிகளில் 5 பேர் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்சில் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.