ADDED : ஜன 06, 2025 12:07 AM
தேவகோட்டை; தேவகோட்டையில் பனங்கிழங்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகிறது. -
கிராமங்களில்  ஆற்று மண்ணில் பனங்கொட்டைகள் புதைக்கப்பட்டு மார்கழி மாதம்  பனங்கிழங்காக வளர்ந்து  வரும்.  இந்த பனங்கிழங்கு பொங்கல் பண்டிகை விழாவில் முக்கிய பங்கு வகிக்கும். பொங்கல் பண்டிகையில்  வைத்து சுவாமி கும்பிடுவார்கள். மாட்டு பொங்கல் அன்று மாடுகளின் கழுத்தில் பனங்கிழங்கு கட்டப்படும். இந்த சூழ்நிலையில் பனங்கிழங்கு வரத்து தற்போது அதிகரித்து வருகிறது.
பனங்கிழங்கை அவியல் செய்து வேக வைத்தும், பச்சை கிழங்காகவும் விற்பனைக்கு வந்துள்ளது. அனுமந்தக்குடி, கண்ணங்குடி உட்பட ஆற்றோரப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 50 க்கு மேற்பட்டோர் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதி, தியாகிகள் பூங்கா, மார்கெட் பகுதிகளில் விற்பனை செய்கின்றனர்.
பொங்கலுக்கு  10 நாட்கள் இருந்த போதிலும் மருத்துவ குணம் உள்ளதால்  மக்கள் மத்தியில்  மிகுந்த ஆர்வமாகவும்,  தேவைப்படும் பொருளாகவும் மாறிவிட்டது.  இதன் காரணமாக பனங்கிழங்கை  ஆர்வமாக மக்கள் வாங்கி செல்கின்றனர்.

