அடிப்படை வசதி இல்லாத மகாத்மா நகர் குடியிருப்புவாசிகள் புலம்பல்
அடிப்படை வசதி இல்லாத மகாத்மா நகர் குடியிருப்புவாசிகள் புலம்பல்
ADDED : செப் 24, 2026 06:01 PM
சிவகங்கை,செப்.25-
சிவகங்கை அருகே தொண்டி ரோட்டில் உள்ள மகாத்மா நகரில் அடிப்படை வசதிகள் இன்றி வசிப்பதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
சிவகங்கை நகரின் அருகில் தொண்டி ரோட்டில் உள்ளது மகாத்மா நகர். இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி தெருக்களில் தார் ரோடு கிடையாது. கழிவு நீர் செல்வதற்கு கால்வாய் கிடையாது. இங்கு வசிக்கும் மக்கள் கழிவு நீரை தெருக்களில் விடுகின்றனர். மழை காலங்களில் இந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. சாலை ஓரத்தில் இரு புறங்களிலும் முட்புதர்கள் இருப்பதால் டூவீலரில் கூட செல்ல முடியவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குடியிருப்போர் சங்க தலைவர் மாணிக்கம் கூறுகையில், எங்கள் பகுதியில் கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மெட்டல் ரோடு போடப்பட்டது. அதுவும் தரம் இல்லாமல் போட்டதால் ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக மாறி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். கழிவு நீர் கால்வாய் இல்லாததால் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய கழிவு நீரை ரோட்டில் விடும் சூழல் தான் உள்ளது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. கொசுக்கள் அதிகம் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. கடந்த 10 வருடங்களாக கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியை ஆய்வு செய்து தெருக்களுக்கு முறையான சாலை வசதியையும் கழிவுநீர் கால்வாய் அமைத்து கொடுத்து அடிப்படை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
