ADDED : பிப் 20, 2025 07:31 AM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் மிகவும் நீளமான படுகை அணை முதன் முதலாக அமைய உள்ளதால் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
வைகை ஆற்றில் நிலத்தடி நீரை அதிகரிக்கவும், அனைத்து கண்மாய்களுக்கும் பாசனத்திற்கு தண்ணீரை பகிர்ந்து அளிக்கவும் தடுப்பணை மற்றும் படுகை அணை கட்டப்படுவது உண்டு. திருப்புவனம் பகுதியில் அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டம், மதுரை கூட்டு குடிநீர் திட்டம் ஆகியவற்றிற்காக தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
பாசன தேவைக்காக தட்டான்குளம், லாடனேந்தல், வாகுடி விலக்கு, மானாமதுரை, கீழப்பசலை ஆகிய இடங்களில் படுகை அணைகள் கட்டப்பட்டுள்ளன. சாதாரணமாக படுகை அணைகள் 200 முதல் 250 மீட்டர் வரை நீளம் கொண்டதாக கட்டப்படும்.
முதன்முறையாக கானுார், பழையனுார் கண்மாய் பாசனத்திற்காக மிக நீளமான படுகை அணை திருப்புவனம் புதுார் வைகை ஆற்றுப்படுகையில் அமைய உள்ளது. 410 மீட்டர் நீளமுள்ள இந்த படுகை அணையில் வலது புறம் பழையனுார் கண்மாய் பாசனத்திற்காக இரண்டு ஷட்டர்களும், இடது புறம் கானுார் கண்மாய் பாசனத்திற்காக நான்கு ஷட்டர்களும் அமைக்கப்படுகின்றன.
ஆயிரத்து 50 ஏக்கர் பரப்பளவுள்ள கானுார் கண்மாயில் எட்டு மடைகள்மூலம் கானுார், கல்லுாரணி, வேம்பத்துார், பச்சேரி உள்ளிட்ட கிராமங்களைச சேர்ந்த மூவாயிரத்து 500 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும் கானுார் கண்மாயில் 332 மில்லியன்கனஅடி தண்ணீர் தேக்க முடியும்.
450 ஏக்கர் பரப்பளவுள்ள பழையனுார் கண்மாயில் ஒன்பது மடைகள்மூலம் ஆயிரத்து 200 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. பழையனுார் கண்மாயில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்க முடியும், கானுார் மற்றும் பழையனுார் கால்வாயின் முகப்பு உயரமாகவும் வைகை ஆறு பள்ளமாகவும் இருப்பதால் வைகை அணையில் இருந்து தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டாலும் முழுமையாக கண்மாய்க்கு சென்று சேர்வதில்லை.
தற்போது 40 கோடியே 27 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படும் தடுப்பணை மூலம் பழையனூர், கானூர் கண்மாய்களுக்கு தண்ணீர் முழுமையாக சென்று சேர வாய்ப்புள்ளது. திருப்புவனம் புதூர், மடப்புரம், கணக்கன்குடி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீரும் உயர வாய்ப்புள்ளது.
வைகை ஆற்றில் சிவகங்கை மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள படுகை அணைகளில் கானூர் படுகை அணைதான் மிகப்பெரிய அணையாக அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.