கடமைக்காக நடக்கும் காலை உணவு திட்டம்: சத்தான காய்கறி கிச்சடி, கேசரி ரத்து
கடமைக்காக நடக்கும் காலை உணவு திட்டம்: சத்தான காய்கறி கிச்சடி, கேசரி ரத்து
ADDED : மார் 25, 2026 05:44 PM
சிவகங்கை:தமிழகத்தில் காலை உணவு திட்டத்தில் சத்தான உணவை படிப்படியாக குறைத்து வருவதாக மாணவர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் 17 லட்சம் மாணவர்களுக்கு காலையில் சத்தான வழங்கும் நோக்கில், காலை உணவு திட்டம் 2022 செப்., 15 அன்று துவக்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் மூலம் கோதுமை, அரிசி, ரவா உப்புமா, கிச்சடி, காய்கறி கிச்சடி மற்றும் சாம்பாருடன் வெள்ளி தோறும் கேசரி என 13 வகை உணவுகள் வாரம் முழுவதும் வழங்கப்படும் என தெரிவித்தனர். நாள் ஒன்றுக்கு தலா மாணவருக்கு அரிசி 50 கிராம், எண்ணெய் 13 மில்லி, பருப்பு 50 கிராம் வீதம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்களன்று உப்புமா (ரவை, கோதுமை, சேமியா) வகை, செவ்வாய் கிச்சடி ( ரவை, காய்கறி கிச்சடி, சோளம், கோதுமை ) வகை, புதன் தோறும் சாம்பாருடன் ரவா, வெண் பொங்கல், வியாழன் தோறும் சேமியா உப்புமா, வெள்ளிதோறும் ஏதேனும் ஒரு கிச்சடியுடன் கேசரி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் தி்ங்களன்று சாம்பாருடன் வெண் பொங்கல், செவ்வாயன்று கோதுமை உப்புமா, புதனன்று மீண்டும் வெண் பொங்கல், வியாழன்று அரிசி உப்புமா, வெள்ளியன்று சேமியா கிச்சடி என ஒரே விதமான உணவுகளை மட்டுமே வழங்கி வருகின்றனர்.
குறிப்பாக அரிசி உப்புமா ‛கேப்பை கூழ் போல்' இருப்பதால் அவற்றை சாப்பிட முடியாமல், ‛ருசி' தட்டி போய் அரைவயிறுடன் பள்ளிக்கு செல்வதாக மாணவர்களின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
காய்கறி கிச்சடி, கேசரி இல்லை
இது குறித்து காலை உணவு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டம் தனியார் மூலம் செயல்படுவதால் பெரும்பாலும் உப்புமா, பொங்கல், கிச்சடிக்கு மட்டுமே பொருட்களை வாங்கி தருகின்றனர். சத்துக்களை அதிகரிக்க காய்கறி கிச்சடி செய்து தருவதற்கான பொருட்களை வழங்குவதில்லை. வெள்ளி தோறும் கிச்சடியுடன் ரவா, சேமியா கேசரி இனிப்பு வழங்கவில்லை என்றனர். சமூக நலத்துறையினர், அரசு அறிவித்தபடி காலை உணவு திட்டத்தில் சத்தான உணவு மாணவர்களுக்கு கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
