ADDED : ஜூன் 10, 2025 01:18 AM
கண்டவராயன்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் பரக்கினிப்பட்டிக்கு 25 ஆண்டுகளுக்கு பின் பஸ் போக்குவரத்து துவங்கியது.
இக்கிராமத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் ரோடு பழுதால் பஸ் போக்குவரத்து நின்றது. பின்னர் ரோடு சீரமைக்கப்பட்ட போதும், பஸ் போக்குவரத்து துவங்கவில்லை.
இப்பகுதியினர் மூன்று கி.மீ. துாரத்திலுள்ள உடையநாதபுரம் விலக்கு ரோட்டிற்கு சென்று பஸ் ஏறி சென்றனர். பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் சிரமப்பட்டனர்.
பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து பரக்கினிப்பட்டி வழியாக திருப்புத்துார் செல்லும் இரு பஸ்களை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.
பொன்னமராவதியிலிருந்து திருப்புத்துார் செல்லும் வழியில் காலை 9:00 மணிக்கு எண் 3ம், மாலை 4:40 மணிக்கு எண் 14 ஆகிய பஸ்கள் பரக்கினிப்பட்டிக்கு வந்து செல்கின்றன. பல ஆண்டுகளுக்கு பின்னர் கிராமத்திற்கு வந்த அரசு பஸ்சை ஆரத்தி எடுத்து இனிப்பு வழங்கி கிராமத்தினர் வரவேற்றனர்.