ADDED : செப் 01, 2026 06:53 PM
திருப்புவனம், செப்.2-
தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் கேமரா பொருத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், காரைக்குடி கோட்டம் சார்பாக காரைக்குடி, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட 11 கிளைகள் மூலமாக 700 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது புதிய மஞ்சள் நிற பஸ்களும், சி.என்.ஜி., பஸ்களும் இயக்கப்படுகின்றன.
மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக 300க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன . ராமேஸ்வரம் பஸ்களில் வெளி மாநில பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். தனியார் பஸ்களில் பஸ்சின் உள்ளேயும் வெளியிலும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் பாதுகாப்பு உள்பட விபத்து போன்ற காலங்களிலும் விதி மீறல் பற்றி கண்டறிய பயன்படுகிறது.
ஆனால் அரசு பஸ்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் இல்லாததால் பஸ்களில் பயணிகளிடம் பணம், நகை திருடி சென்றாலும் கண்டறிய முடிவதில்லை. விபத்து போன்ற காலங்களிலும் அரசு பஸ் டிரைவர்கள் மீதே குற்றம் சாட்டப்படுகிறது. நவீன தொலை தொடர்பு வசதிகள் பெருகி வரும் நிலையில் அரசு பஸ்களில் பயணிகள் பாதுகாப்பிற்கு எந்த வித வசதிகளும் செய்து தராமல் இருப்பது தினசரி பயணிகளுக்கும், டிரைவர், கண்டக்டர்களுக்கும் சிரமம் ஏற்பட்டு வருகிறது .
எனவே போக்குவரத்து கழகங்கள் தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
