UPDATED : அக் 14, 2026 07:14 PM
ADDED : அக் 14, 2026 07:12 PM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் எட்டுப் பேரூராட்சிகளின் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்ற நமஸ்தே திட்ட முகாம் நடந்தது.
நாட்டில் துப்புரவு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசால் ‛நமஸ்தே’ என்ற பெயரில் இயந்திரமயமாக்கப்பட்ட சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை அறிவிக்கப்பட்டு மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. திருப்புத்தூரில் முகாமை திருப்புத்தூர் செயல் அலுவலர் நடராஜன் முன்னிலையில் பேரூராட்சி தலைவர்கள் கோகிலாராணி நாராயணன், பழனியப்பன் துவக்கினர்.
271 துப்புரவுப்பணியாளர்கள் தங்கள் தேவை குறித்து துறைவாரியாக மனு அளித்தனர்.
துப்புரவுப்பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கப்பட்டன. நெற்குப்பை செயல் அலுவலர் பஸலிகா ஜான்ஸி நன்றி கூறினார்.
